வீரனாம் அனுமனைப் போற்றுவோர் வெல்வர்
அனுமன் நாற்பது
(தொடர்ச்சி)


இருப்பரோ ஒருவர் உன் இன்னருள் இன்றி
இராம நாட்டுள், வாயிற் காவலனே!

உன்னை அண்டினோர் உயரின்பம் பெறுகிறார்
உன்னுடைக் காவலே ஓட்டும் பேரச்சம்

உலகம் மூன்றும் நடுங்கிட உருமுவோய்
உலப்பிலா உனதாற்றல் ஒடுக்கவும் வல்லோய்

மாவீரா உன்நாமம் மனத்தில் நினைத்திட
ஆவியும் பேயும் அண்டுமோ ஐயா

வாய்நிறைந் தெப்போதும் உன்நாமம் வாழ்த்தினால்
நோயெலாம் நீங்கும் நொந்திடும் துன்பமும்

மனமும் வாக்கும் செயலும் பொருந்தி
அனுமனே உனைப்போற்ற உறுதுயர் அகன்றிடும்


அனைத்திலும் உயர்ந்த அருந்தவச் செம்மலின்
அனைத்துப் பணிகளும் அருமையாய் ஆற்றினாய்

அடியார் விருப்பம் அனைத்தும் நிறைவேற்றி
விடிவாம் அனுபூதிக் கனியும் அளிப்பாய்

உகங்கள் நான்கிலும் உன்புகழ் பரவிடும்
சுகம்நிறை உன்நாமம் சுவைபடச் சிறக்கும்

நல்லோர் ஞானியர் காவலன் நீதான்
அல்லல் அசுரரை அழித்திடும் அன்பன்

எண்சித்தி நவநிதி அடியவர்க் கீந்திடும்
எண்ணரும் வரமுனக் கீந்தனள் சானகித்தாய்

இராம ஆனந்தம் இதயம் நிறைந்திட
இராம தாசனாய் என்றும் இலங்குவாய்

உன்னை உள்ளுவோர் இராமரை அடைவார்
சென்மப் பாவங்கள் சிதைந்திடும் அகலும்

இறுதிக் காலத்தில் இராமரின் கோட்டையுள்
அரியின் பத்தனாய் நுழைகிறார் ஆனந்தமாய்

எந்தத் தெய்வமும் ஏத்தாமல் உன்பால்
சிந்தையைச் செலுத்தினால் சுகமெலாம் சேர்ந்திடும்.

வீரனாம் அனுமனைப் போற்றுவோர் வெல்வர்
தீர்ந்திடும் துயரெலாம் தீரனாய் வாழ்வர்

கருணைக் கடலே குருவெனக் காப்பாய்
அருள்வாய் அனுமனே போற்றி போற்றி

அனுமன் நாற்பதை அன்பொடு நூறுமுறை
இன்புறப் படிப்போர் இருள்தளை நீங்கும்

அனுமன் நாற்பதைப் படிக்கும் அடியவர்
என்றும் வெல்வர் ஈசனே சாட்சி

அரியின் அடியவன் துளசிதாசன் வேண்டினேன்
”இருப்பாய் இறைவனே என்றும் என் இதயத்தில்”

  ***********
                 
வானவர் தலைவனே வாயுவின் மைந்தனே
ஆனதுயர் அழிக்கும் அருள்பொழி வடிவனே
சானகி இராமர் இலக்குவர் சார்ந்து
வானரர் தலைவா! வசித்திடென் இதயத்தில்

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம0 comments:

Post a Comment